Saturday, July 11, 2009

நான் அறிந்த சிலம்பு - பதிகம் (பகுதி 1)

சிலப்பதிகாரம் என்ற மாபெரும் படைப்பு, பெரும்பாலானோர்க்கு ஒரு தவிர்க்க முடியாத பாதிப்பை உருவாக்கி நிற்பது உண்மை. அத்தகைய பாதிப்பு என்னுள்ளும் இருக்கிறது.சிலம்பின் கதை நம் வாழ்வியல் இலக்கணத்தின் படிமங்கள் பலவற்றைத் தொகுத்துச் சொல்கிறது என்றதொரு எண்ணம் எனக்குண்டு. அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் பல பாடல்கள் பள்ளிப்
பருவம் தொட்டுப் படித்த போதும், முழுமையாக இதனைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு எப்போதும் இருந்து வந்தது. இப்போது படிக்கவும் தொடங்கிவிட்டேன். எனக்குப் புரிந்ததை என் மனதில் பதிந்ததை வலையில் பதியும் ஆர்வம் வந்தது. இதோ தொடங்கிவிட்டேன். முக்கிய செய்திகள் மட்டும் தொகுக்கும் நோக்கம் காரணமாய் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தையான விளக்கமாய் இல்லாமல் ஒரு தொகுப்பாய் மட்டுமே இருக்குமென்று நினைக்கிறேன். என்றாலும் விடுபட்ட முக்கிய குறிப்புகளை அவ்வப்போது விளக்கவும்முற்பட்டுள்ளேன்.

பதிகம்

குடதிசைச் சேரமண்ணின்
மன்னன் செங்குட்டுவனும்
குணவாயில் கோயிலில்
துறவுக்கோலம் பூண்ட
அவன் தம்பி இளங்கோவும்
மலைவளம் கண்டு களித்துப்
பெரியாற்றங்கரையில்
பேரோய்வில் ஆழ்ந்திருந்த வேளை...

குன்றக்குரவர்
திரளென வந்து
தந்ததொரு செய்தியது
விந்தையிலும் விந்தை!!

பொன்னிற மலர்நிறை
வேங்கை நிழலில்
தன்னொரு முலையிழந்த
நிலையில் நின்றனள்
மங்கையொருத்தி
மாபெரும் பத்தினி.

அவள்முன் தோன்றினன்
தேவர் தலைவன்
இந்திரன்.
இறையெய்திய அவள்தம்
கணவன் திருமுகம்
அவள் கண்முன் காட்டினன்;
பின்
வானூர்தியில்
மங்கையவளுடன்
விண்னுலகம் சென்றனன்.

மெய்யோ இது பொய்யோ?
இந்த விந்தைதான் எதுவோ?
நல்லதோ? கெட்டதோ?
இதன் விளைவுதான் எதுவோ?
விளக்கம் கேட்டு மன்னனை
வினவி நின்றனர்
குன்றக்குரவர்.

சிலம்பு வரிகள்..இங்கே...

(தொடரும்)

Thursday, July 9, 2009

உவமை உருவகம்


காதல்....
எல்லையற்ற
மகிழ்ச்சிக்கான
இணையற்ற உவமை.
உயிரின் அனைத்து
உணர்ச்சிகளின்
உணர்வுகளின்
இணையற்ற உருவகம்.

Wednesday, June 24, 2009

32 கேள்விகள் 32 பதில்கள்

32 கேள்விகள் தொடர் பதிவுக்கு என்னை அழைத்த கோமதிக்கு நன்றி.

எனது பதில்கள்:

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

ஜாதகப் பெயர் 'ஹே'யில் தான் வந்ததாம்..தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக மலர்ச்செல்வி என்று வைத்தார்கள் என் அப்பாவும் தாத்தாவும்.

மிகவும் பிடிக்கும். அதிலும் சுருக்கமாக 'மலர்' மிகவும் பிடிக்கும்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

அய்யோ..தொலைக்காட்சி, சினிமாக் காட்சிகளுக்காய் உணர்ச்சிவசப்பட்டு அடிக்கடி அழுவதுண்டு....கடைசியா Federer சமீபத்திய போட்டியில் ஜெயித்த போது, அவர் அழுத அழுகையில் எனக்கும் அழுகை வந்துவிட்டது..

உண்மையான வாழ்க்கை நிகழ்வுகளுக்காய் நான் அழுவது மிக அபூர்வம்...
அந்த வகையில் ஊரிலிருந்து ரியாத் திரும்பி வரும்போது கடைசியாகக் கொஞ்சமாக அழுதேன் என்று நினைக்கிறேன்.


3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?

நல்ல காய் போட்டு செய்த எந்த வகைக் குழம்பும் மிகவும் பிடிக்கும்..மற்றபடி வழக்கமான சாதம், பொரியல் எதுவாக இருந்தாலும் சரி..

5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

கண்டிப்பாக வைத்துக் கொள்வேன்.


6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவியில் குளிக்க மிகவும் பிடிக்கும்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அவர்கள் பழகும் விதம். அதற்கு ஏற்றாற் போல் பழக வேண்டும் என்பதற்காக..


8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்த விஷயம்: எளிதில் அனைவரிடமும் பழகுவது;
பிடிக்காத விஷயம்: சோம்பேறித்தனம், கோபம்.


9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்த விஷயம்: எந்தப் ப்ரச்னையையும் எளிதாக ஏற்றுக் கொண்டு, எதையும் சமாளிக்கும் பக்குவம்+தைரியம், தோழமையுணர்வு.

பிடிக்காத விஷயம்: சின்ன மற்றும் பெரிய விஷயங்களுக்குத் திட்டமிடாத தன்மை.

10. யார் பக்கத்திலே இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

மறைந்துவிட்ட என் அப்பா...

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
அட..எனக்குப் பிடித்த கத்தரிப்பூ வண்ணம்...


12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

K Tv யில் காக்கிச்சட்டை படத்தில் கமல்...


13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

பேனா என்றால் கத்தரிப்பூ வண்ணம்....மை என்றால் கருப்பு அல்லது பச்சை.

14. பிடித்த மணம்?

மல்லிகைப்பூமணம், ஜாதிப்பூமணம், மண்வாசனை, விபூதி வாசனை.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

கிருத்திகா - இன்னும் நேரில் பார்த்ததில்லை..பதிவுகளில்தான் அறிமுகம்...ஓரிரு முறை மட்டுமே chat பண்ணியுள்ளோம்..இருந்தாலும் ஏதோ நீண்ட காலம் பழகிய தோழி போன்ற ஓர் உணர்வு. என்னுடன் ஒத்துப் போகின்ற ஒற்றுமைகள் பிடித்த விஷயம்...இன்னும் கொஞ்சம் இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசை என்பதால்..அவரை அழைக்கப் போகிறேன்.

செல்வி ஷங்கர் - நம்ம சீனா சார் மனைவிதான். நேரில் சந்தித்தபோதும் சரி, எழுத்துகளில் சந்தித்த போதும் சரி, வியக்க வைக்கும் விஷயங்கள், கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இவரிடம் உண்டு...இவரைப் பற்றியும் இன்னும் சற்று அதிகமாக அறிந்து கொள்ள ஆசை..

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

நிலாக்குட்டி பற்றிய எல்லாப் பதிவுகளும்..கோமதி எழுதுவதிலிருந்து கொஞ்சமும் கூடாமல் குறையாமல் இருக்கும் நிலாவின் செயல்கள்...கோமதியின் விவரிப்புத் திறமை பாராட்டுக்குரியது...

17. பிடித்த விளையாட்டு?

உட்கார்ந்து விளையாடுவதில் ரம்மி, பல்லாங்குழி...ஓடி விளையாடுவதைப் பார்க்கப் பிடிக்கும்..குறிப்பாக டென்னிஸ் பார்க்கப் பிடிக்கும்.

18. கண்ணாடி அணிபவரா?

புத்தகம் படிக்கும் நேரம் பார்வைக் கோளாறுக்கான கண்ணாடி, சவுதி வெயிலுக்குக் கறுப்புக் கண்ணாடி.


19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

மனதுக்குப் பாரமான முடிவுகள் இருக்கவே கூடாது...இலகுவான கதை..அழுத்தமான காட்சிகள் சில...பொழுது போக்கு அம்சங்கள் நிறைய இருக்க வேண்டும்...

20. கடைசியாகப் பார்த்த படம்?

திரையரங்கில் 'தசாவதாரம்' (ஊரில்தான்..ரியாத்தில் ஏதுங்க திரையரங்கம்)
சிடி யில் 'யாவரும் நலம்'.


21. பிடித்த பருவ காலம் எது?

வசந்தம்...

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

இப்போதைக்கு 'அடோன்' தமிழ் இலக்கணம்..என் பெண்ணுக்கு இலக்கணம் கற்றுக் கொடுப்பதற்கு உதவியாக இருக்கிறது.
நிறைய இருக்கிறது கைவசம்...நேரம் முழுமையாகக் கிடைக்க இன்னும் கொஞ்சம் காலம் காத்திருக்க வேண்டும்...

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

என் பெண்தான் அவ்வப்போது மாற்றுவாள்..

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம்: மென்மையான எந்த ஒரு பாடலும்
பிடிக்காதது: அதிரடியான எதுவும்..

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

எகிப்து, கென்யா

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

கொஞ்சம் எழுதுவது.


27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

சந்தர்ப்பவாத நடிப்பு.


28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

முன்கோபம்


29. உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தளம்?

அயல்நாடுகளில் ..எகிப்து...நம் நாட்டில் ஜெய்ப்பூர்

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

என்னில் சில குணங்களை மற்றும் தவிர்த்து நான் நானாகவே இருக்க ஆசை.

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

அப்படி என்று ஒன்றுமே கிடையாது.


32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.

பலவகை அனுபவங்கள் ஏந்திய அழகான அட்சய பாத்திரம்...

Thursday, June 18, 2009

காதல் குழல்



வேய்ங்குழலின்

சிறுதுளையில்

நாபிக் காற்றின்

உயிர்த்துளிகள்

விரவி நிற்க

மெல்ல எழும்

இசையின் குரலில்

நம் காதல்.

Sunday, May 24, 2009

சிரித்தோம் சிந்தித்தோம்


ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக கடந்த ஏப்ரல் 30ந் தேதி, ரியாத் இந்திய பெண்கள் பன்னாட்டுப் பள்ளியில் நடந்த 'சிரிப்போம் சிந்திப்போம்' நிகழ்ச்சி மிக அருமையாக நடந்தேறியது. பேராசிரியர் டாக்டர் பெரியார்தாசன் அவர்களின் சொற்பொழிவை அடுத்து, ரோபோ ஷங்கர், ஈரோடு மகேஷ், ஜெகன் ஆகியோரின் பல்சுவை நிகழ்ச்சி சரியான விருந்து....நகைச்சுவை
மருந்தும்தான்...

நிகழ்ச்சி முடிந்ததும் நகைச்சுவைக் கலைஞர்கள் இந்தியா திரும்பினர். திரு. பெரியார்தாசன் அவர்கள் மேலும் இரண்டு வாரம் இங்கே தங்கியிருந்தார். இரண்டு வாரமும் சற்றும் ஓயாமல், சளைக்காமல் அடுத்தடுத்துப் பலவித நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

குறிப்பாக ரியாத், தமாம் மற்றும் ஜெத்தாவில் பள்ளி மாணவர்களின் சுய முன்னேற்றத்துக்காக அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. பாடங்கள் குறித்த திட்டமிடல், மனதை ஒருமுகப்படுத்துதல், படிக்க வேண்டிய சூழல் முதலிய தலைப்புகளில் அவர் கொடுத்த குறிப்புகள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன.

ஒரு பள்ளியில் ஒரு நிகழ்ச்சி என்ற நிலை மாறி அன்றாடம் ஒரு பள்ளி விஜயம் என்றாகிப் போனது. சவுதி அரேபிய மாணவ சமுதாயம் அவரை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.

சாதாரணமாக மனிதர்களைத் தாக்கக்கூடிய மனப்பிறழ்வுகள் பற்றிய அவரின் மனோதத்துவத்துறை சார்ந்த சொற்பொழிவுகளும் சரி, இனிய வாழ்க்கைக்கான வழிமுறைகள் குறித்த சொற்பொழிவுகளும் சரி...மீண்டும் மீண்டும் வியப்பில் ஆழ்த்திக் கொண்டேயிருந்தன.

ரியாத் எழுத்துக்கூடம் சார்பாக நிகழ்ந்த கவியரங்கத்தில் வெளிப்பட்ட அவரின் கவிதை முகம் பலரையும் மகிழ்ச்சிப் பரவசத்தில் ஆழ்த்தியது. புதுக்கவிதை, மரபுக்கவிதை எல்லாவற்றிலும் புலமை வாய்ந்தவர் என்பதைக் கண்கூடாகக் காணமுடிந்தது.

திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியம் நமக்காக வகுத்திருக்கும் வாழ்க்கை நெறிகளில் இருந்து விலகி வேறுவழி செல்வதன் மூலம் எவ்வளவு சந்தோஷங்களை இழந்திருக்கிறோம் என்று அவர் கோடிட்டுக் காட்டியது...நல்மனம் பெறும் குறிப்புகள் தந்தது...என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

தனிப்பட்ட முறையில் மனவியல் குறித்த ப்ரச்சனைகளுக்காக சிலருக்கும் சிகிச்சை அளித்தார். அதன் பலனாய் அவர்கள் இன்று நலம் கண்டு முன்னேறி வருவதாகவும் தெரிய வந்தது.

தூய தமிழ், சென்னைத் தமிழ், ஆங்கிலம் என்ற அனைத்திலும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் அவருடைய பேச்சாற்றல் தனித்தன்மை வாய்ந்தது.

தன்முனைப்புப் பயிற்சியாளர், பச்சையப்பன் கல்லூரி தத்துவத்துறை உளவியல் பேராசிரியர்(ஓய்வு), 25 ஆண்டுகளாக மனவியல் பயிற்சியாளர், 20 ஆண்டுகளாக மனவியல் சிகிச்சையாளர், பல்வேறு துறைகளில் பல புத்தகங்கள் எழுதியவர், இலக்கியவாதி, சர்வதேச கருத்தரங்குகளில் மனவியல் சிகிச்சை பற்றிய கட்டுரைகள் வழங்கியவர், 'கருத்தம்மா' புகழ் திரைப்பட நடிகர் ..இவ்வாறாயப் பல்முகங்கள் கொண்டவரின் அனைத்துத் துறைத் திறமைகளையும் கண்கூடாகக் காணமுடிந்தது.

எப்பேர்ப்பட்ட எளிமையான மாமனிதர் என்ற வியப்பிலிருந்து இங்கே நான் மட்டுமல்ல, இன்னும் பல நண்பர்களும் விடுபடவேயில்லை.

Tuesday, April 28, 2009

மனிதம்

மனிதம்
மனதின் புனிதம்
தேவை இந்த வேதம்.

மனிதநேயம் மட்டுமே
விதியாய்க் கொண்டு
உயிர்கள் பலவும்
உலவிய காலம்
இது மனிதம் அன்று

மனிதம் மருவி
மதம் என்றாகி
இனம் என்றாகி
பணம் என்றாகி
பதவி என்றாகி............
மதம் பிடித்து
ஆ(ட்)டுகின்றது இன்று..

வாழ்க்கை அகராதியில்
மனிதத்தின் அர்த்தங்கள்
திரும்பத் திரும்பத்
திருத்தி எழுதப்பட்டு
திக்குத் தெரியாமல்
திகைக்கின்றது இன்று.

சாலியன்வாலாபாக்கில்
சக உயிர்கள்
சல்லடையாய்த்
துளைபட்ட போது
துடித்தெழுந்தது மனிதம் அன்று.

இலங்கை தொடங்கி
இஸ்ரேல் வரை
இனங்களின் பிணக்குவியல்களில்..
இதயங்கள் தின்னும்
இரத்த தாகத்தில்
இரை தேடுகின்றது மனிதம் இன்று

அரிய சரித்திரங்கள்
அசாதாரணமான செயல்கள்
அனாயாசமான சாதனைகளாய்..
மனிதமாய் அன்று..

உரிய கடமைகள்
சிறிய உதவிகள்
உயர்ந்த மனிதமாய் இன்று

முதுமையில்
முதியோர் இல்லம் செல்லாமல்
வாரிசுகளுடன் வாழ்க்கை
இது இன்று மனிதம்

உடன்பிறப்புகளுள்
உரசல்கள் இல்லாத
உறவுமுறைகள்
இது இன்று மனிதம்

இன்னும் கைப்பைக்குள்
கைத்துப்பாக்கி கத்தி
சுமக்கவில்லையே நாம்
இது இன்று மனிதம்.

பரிணாமத் தளர்ச்சியில்
பன்முகங்கள் கண்டாலும்
பாழ்பட்டு நின்றாலும்
நல்மனங்களில் இன்னும்
நலியாமல்
நாடிதுடித்து நிற்கிறதே
இதுவும் இன்று மனிதம்.

ஏதோவோர் மூலையில்
எரியும் உயிருக்காய்
சுனாமியில் சுருளும்
சகோதரருக்காய்
இனங்கள் அழிகையில்
இறைந்து கிடக்கும்
பிணங்களுக்காய்

இதயங்கள் வடிக்கும்
இரத்தக் கண்ணீரில்....
வலிய வந்து
உதவும் கரங்களில்...
இறக்காமல்இன்னமும் நின்று
இயங்குகின்றது மனிதம்.
இயக்குகின்றது மனிதம்.

Sunday, March 29, 2009

காலத்தின் கட்டாயம்

நித்தமொரு
புத்தம்புது விடியல்

பழகிய நட்புடன்
பகையோ பகை
விலகிய நட்புடன்
இழையோ இழை

நேற்று குலுக்கிய கைகள்
இன்று
நெரிக்கும் கழுத்துகள்

இச்சையாய் அனிச்சையாய்
இதயம் கழற்றி எறிந்து
இங்கிதமின்றி அறிக்கைகள்
இரைப்பை நிறைப்புகள்

பணப்பைக்குப் பண்டமாற்றாய்ப்
பல உயிர்ப்பாதகங்கள்
பலியாடுகள் பொதுமக்கள்

மீண்டும்
தேர்தல் தேர்
உலா வரும் நேரம்..

பழைய பாத்திரங்களுடன்
புதிய சரித்திரம்
புதிய மேடையில்
பழைய நாடகம்
தற்காலிக அரங்கேற்றம்.
தவிர்க்க முடியாத
காலத்தின் கட்டாயம்.